இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
    
இலங்கை இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிட்டனிலும் வெளிநாடுகளிலும் வாழும் பாதிக்கப்பட்ட தரப்பினர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.

இக்கோரிக்கையை உள்ளடக்கி 900 க்கும் மேற்பட்டோரால் கையெழுத்திடப்பட்ட மனுவையும் அவர்கள் அக்கடிதத்துடன் இணைத்துள்ளனர். அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை நினைவுகூருகின்றோம். இருப்பினும் இன்னமும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்படவில்லை.

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணையனுசரணை வழங்கியதன் மூலம் தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுகின்றோம்.

அதேபோன்று தற்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுவருகின்றது என்பதை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திவருவதையும் வரவேற்கின்றோம்.

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதையும், மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்துவதையும் முன்னிறுத்தி கடந்த ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதி கனேடியப் பாராளுமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையை உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ்மக்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரும் பெரிதும் பாராட்டினர். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை அத்தீர்மானம் வழங்கியது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுமாறு உங்களிடமும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வலியுறுத்துகின்றோம். தேவையேற்படும் பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பில் பிரிட்டன் தனியாகவோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ தீர்ப்பாயமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக உடனடியாகப் பயணத்தடை விதிக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!