தமிழர் உரிமைப் போராட்டத்தின் மீது தடைக்கற்கள் நடாதீர்கள்! கே.வி.தவராசா

தமிழர் உரிமைப் போராட்டத்தின் மீது தடைக்கற்கள் நடாதீர்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவி்த்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  அதி்ல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  ‘‘யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகின்றது. தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு இன்னும் தீர்வைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை.

தமிழர் தரப்புத் தலைமைத்துவம் இன்னும் வலுப்பெற்று தமிழினத்துக்காக உயிர் நீத்த அத்தனை தியாகிகளினதும் கௌரவம் பேணும் தரத்தில் உரிமைக்குரலை உயர்த்தவில்லையாயினும் மக்களின் இடைவிடாத சாத்வீகப் போராட்டம் இன்னும் இடைவிடாது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதுமட்டுமே இன்றளவும் நமக்கிருக்கிருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் சுடரை அனைத்துவிடும் செயற்பாடுகளில் இப்போது சிலர் இறங்கியிருக்கின்றார்கள் என்பதுதான் வேதனையானது. யுத்தம் முடிந்த கையோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதில் பல எதிர்ப்புகள் இருந்தன. காலம் செல்லச் செல்ல தமிழர் போராட்டத்தில் இருந்த நியாயத்தை பெரும்பான்மை மக்கள் புரிந்துகொள்ளும் சூழலை காலம் மெல்ல மெல்ல ஏற்படுத்தியிருந்தது.

மக்களின் வேதனையும் உயிரிழப்பின் துன்பமும் மாறாத வடுவானதால் அதை நினைவு கூர்தல் பிழையல்ல என்ற நிலைப்பாட்டுக்கு பெரும்பான்மை மக்களில் நியாயமாகச் சிந்திக்கும் மக்கள் வரத்தொடங்கியிருக்கும் காலத்தில் தமிழர் கோரிக்கை நியாயமானது என்றும் ஏதேனும் தீர்வு அவர்களின் நியாயமான குரலுக்கு அளிக்கப்படுவதே தர்மமும் அறமும் என்று காலம் கனியத் தொடங்கியிருக்கும் பொழுதில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் பெயரால் சிலர் முதிர்ச்சியற்ற சுயநல அரசியலைச் செய்ய முனையும் போதுதான் தமிழர் போராட்டம் கொச்சைப்படுத்தப்படும் நிலைதோற்றம் பெறுவதோடு, மீளவும் இனங்களுக்கு இடையேயான புரிதலை இனவாதமாக மாற்ற சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கும் சிலருக்கு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பொரளையில் இருந்துதான் அதுவும் கனத்தைமயானத்தில் இருந்துதான் 1983 ஜீலைக் கலவரம் ஏற்படத் தூபமிடப்பட்டது. 40 ஆண்டுகளை நெருங்குகின்ற வேளையில் மீளவும் அதே இடத்தில் இருந்து மீளவும் ஒரு அனர்த்தத்தை ஏற்படுத்த வழியேற்படுத்திக் கொடுக்க சிலர் முனைவது பேரினவாதத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தூண்டும் செயல்பாடுமாகும்.

வடக்குகிழக்கில் நினைவேந்தல் ஒவ்வொரு முறையும் பல்வேறு தடைகளையும் தாண்டி முன்னெடுக்கப்பட்டே வந்தது. அதனைத் தடுக்க படைத்தரப்பு சட்டம் என்ற ஆயுதத்தைத்தான் தூக்கிநின்றது. இப்போது கொழும்பில் இந்த முள்ளிவாய்யகால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுக்க முயன்ற நபர்கள் இனவாதத்தைக் கையிலெடுக்கவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைக் கொச்சைப்படுத்தவும் வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒன்று நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இம்முறை தமிழர் தரப்பு இனவாதத் தீயின் வாய்க்கும் வீழ்ந்து விடாமல் கவனமாகச் செயற்படவேண்டிய தருணமிது. ஏனெனில் சர்சதேசத்தின் பிடிமானம் இன்னும் முழுமையாகத் தளர்ந்துவிடவில்லை அடுத்த தேர்தல் ஒன்று வரும் போது தமிழர் உரிமைக்கான தீர்வுத்திட்டம் நிச்சயம் வலுவான கோரிக்கையாக முன்வைக்கப்படும் வாய்ப்புகள் முகிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதற்குத் தடைக்கற்களைப் போடும் வேலையைச் செய்யக் கூடாது.

எந்தவொரு இன விடுதலைப் போராட்டமும் எடுத்த எடுப்பில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது தான் வரலாறு. இப்போது நமக்கான காலம் கணியத் தொடங்கியிருக்கின்றது அதைச் சிதைத்துவிடாமல் பலப்படுத்திப் பாதுகாத்துத் தக்கவைத்துக் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம.

‘தலைவன் உரத்துச் சொன்னான் நீங்கள் கூர்மையாகத் தீட்டப்பட்ட கத்திகள் உங்களை மண்ணில் விதைக்கின்றேன். பளிச்சிடுவதும் மங்கிப்போவதும் இனி உங்கள் கைகளிலேயே ஆயுதப் போர் முடிந்துவிட்டது’ என்று மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் கவிதை நூலின் வரிகளை ஞாபகத்தில் இருத்திக் கொண்டுகாரிய மாற்றவும் அரசியல் செய்யவும் இளந்தலைமுறைக்குநாம் அறிவூட்ட வேண்டும்‘‘ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!