ஜனகவை நீக்கும் பிரேரணை- ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களிக்கும்!

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு ஐக்கிய மக்கள் எதிராகவே வாக்களிக்கும். மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்க போராடியமைக்காகவே அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
    
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான யோசனை யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி இந்த யோசனைக்கு எதிராகவே வாக்களிக்கும். அவர் மக்களுக்கு நியாயமான விலைவில் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கே முயற்சித்தார். அதை விடுத்து எந்த தவறும் இழைக்கவில்லை.

அவர் மக்களுக்கு வழங்கிய சேவைகளே தவறுகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மின் கட்டணத்தை 3 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் 27 சதவீதத்தினால் குறைக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே அரசாங்கம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற பெயரில் அரசாங்கம் இவற்றை நியமித்திருந்தாலும் , திரையின் பின்னால் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாவிட்டால் அரசாங்கம் அதனை நியமித்திருக்கக் கூடாது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தினம் தீர்மானிக்கப்பட்டதிலிருந்து , அரசாங்கத்தின் தேவைக்கேற்ப தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அதன் உறுப்பினராக செயற்பட்ட பி.எஸ்.எம்.சார்ள் முழுமையான ஆதரவை வழங்கினார். அதற்கான அன்பளிப்பாகவே இன்று அவருக்கு ஆளுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அரசாங்கத்தினால் விடுக்கப்படும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்தும் இடமளித்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!