பறக்கும் விமானத்தில் மர்மமாக உயிரிழந்த ரஷ்ய அமைச்சர்!

உக்ரைன் போர் தொடர்பில் விளாடிமிர் புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்த ரஷ்ய அமைச்சர் ஒருவர் பறக்கும் விமானத்தில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் ஊடுருவிய ரஷ்ய படைகள், கடும் பின்னடைவை எதிர்கொண்டும் 453 நாட்களாக போரிட்டு வருகிறது.
  
இந்த நிலையில், ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பல முக்கியஸ்தர்கள் மர்மமான முறையில் மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது விளாடிமிர் புடினுக்கு எதிராக உக்ரைன் போர் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

46 வயதான Petr Kucherenko கியூபாவில் இருந்து தொழில்முறை பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா திரும்பிய நிலையில், விமானத்தில் வைத்து நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனையடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு, மருத்துவர்கள் விமான நிலையத்திலேயே சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.

ஆனால், உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இருதயம் தொடர்பான சிக்கல் காரணமாகவே அமைச்சர் Petr Kucherenko மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருக்கும் உடற்கூறு ஆய்வில் உண்மை காரணம் தெரியவரும் என்றே நம்பப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போக்கு தொடர்பில் அமைச்சர் Petr Kucherenko கடுமையாக விமர்சித்திருந்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போருக்கு புறப்படும் ஒருவாரம் முன்னர் அமைச்சர் Petr Kucherenko நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இன்னும் ஓராண்டு காலத்தில் ரஷ்யா மொத்தமாக அடையாளம் தெரியாமல் மாறக் கூடும், உங்கள் குடும்பத்தினருக்காக ரஷ்யாவில் இருந்து வெளியேறிவிடுங்கள் என அவர் தமது நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய பின்னர், உயர் பொறுப்புகளில் செயல்பட்ட சுமார் 40 பேர்கள் இதுவரை மர்மமாக மரணமடைந்துள்ளனர்.

கடந்த மாதம் புடின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரும் கோடீஸ்வரரும் பிரித்தானியாவுடன் தொடர்பில் இருந்தவருமான 77 வயது Nikolay Bortsov என்பவர் அவரது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உக்ரைன் போரில் புடினை ஆதரிப்பதாக கூறியே, Nikolay Bortsov மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!