அபிவிருத்தி திட்டங்கள் குறித்த உடன்பாடுகளை திருத்த பாராளுமன்ற அனுமதி தேவை!

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அரசாங்கங்களுக்கிடையில் செய்து கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் , பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
    
எனவே ஜப்பானின் இலகு ரயில் வேலைத்திட்டத்தை திடீரென இரத்து செய்ததைப் போன்று , எவராலும் எந்தவொரு திட்டத்தையும் தன்னிச்சையாக இடைநிறுத்த முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமைஇடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிடுகையில் ,

சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எமது நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பாரிய நன்மைகளை அளித்துள்ளன. அவ்வாறானதொரு வேலைத்திட்டமான அவிசாவளையிலிருந்து கொழும்புக்கான இலத்திரனியல் புகையிரத சேவை திடீரென இடை நிறுத்தப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவிருந்த அந்த முக்கியமான வேலைத்திட்டத்தை இழந்துள்ளோம். அதே போன்று ஜப்பானின் இலகு ரயில்சேவையும் இவ்வாறு இடை நிறுத்தப்பட்டது.

எனவே அரசாங்கத்தினால் ஏதேனுமொரு வேலைத்திட்டத்துக்காக செய்து கொள்ளப்படும் எந்தவொரு உடன் படிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் , அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனில் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சிறந்த யோசனையொன்றை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

எனவே அரசாங்கங்களுக்கிடையில் செய்து கொள்ளப்படும் எந்தவொரு உடன்படிக்கையையும் நினைத்த படி மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் , அதற்கு முன்னர் இவ்வாறானதொரு அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!