இது நியாயமா?- சுமந்திரன் கேள்வி.

இல்லாதவர்களிடமிருந்து இருப்பவர்களுக்கு பெற்று கொடுக்கும் செயற்பாடே மின் கட்டண அதிகரிப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், “அதிக மின்னலகை பயன்படுத்துபவர்கள் குறைந்த அளவான கட்டணத்தை செலுத்த வைப்பது எந்த வகையில் நியாயம்” எனவும் கேள்வி எழுப்பினார்.
    
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியல் அழுத்தத்தின் காரணமாக பதவி விலகினார்கள். அப்போது நாடாளுமன்றத்தின் ஊடாக எவரும் பதவி நீக்கப்படவில்லை. ஆனால் ஆணைக்குழுவின் தற்போதைய தவிசாளரை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை யோசனை முன்வைக்கும் போது, அதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலனை செய்து சிறந்த தீர்மானத்தை அறிவிக்க வேண்டும். மின்சார சபைக்கும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இணக்கமான தன்மை காணப்பட வேண்டும். பூஜ்ஜியம் முதல் 30 வரை மின்னலகுகளை பயன்படுத்துவோருக்கு 175 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிக மின்னலகை பயன்படுத்துபவர்கள் குறைந்த அளவான கட்டணத்தை செலுத்துகின்றனர். அதாவது இல்லாதவர்களிடமிருந்து இருப்பவர்களுக்கு பெற்று கொடுக்கும் செயற்பாடு இங்கு நடைமுறைப்படுத்துகிறது. அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களே அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும். மிகவும் துன்பத்தில் ஏழ்மையில் வாழ்பவர்கள் இதனை அனுபவிக்க கூடாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!