இனவாத, மதவாதப் பேச்சு நாட்டிற்க்கு ஆபத்து : தேசிய இயக்கம் எச்சரிக்கை

இனவாத, மதவாதப் பேச்சுக்களால் நாடு மீண்டும் ஆபத்துக்கு செல்கிறது. இந்தநிலையில் அவ்வாறான நிலை ஏற்படாமல் தடுப்பது ஒட்டுமொத்த தேசத்தின் பொறுப்பு என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் சில அறிக்கைகள் மற்றும் அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு செயற்பாடுகள், நாட்டை மீண்டும் பெரும் ஆபத்தில் தள்ளும் முயற்சிகளாகவே இருப்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை நாட்டின் கடந்த கால விரும்பத்தகாத சம்பவங்களை நினைவு கூரும் போது அவற்றில் பெரும்பாலானவை இத்தகைய பொறுப்பற்ற அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளால் ஏற்பட்டவை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டை மீண்டும் அழிவுகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கான தீய முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

1915 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளின் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு முன்னர் நாட்டில் இதேபோன்ற பின்னணிகளே இன மத மோதல்களுக்கு வழியேற்படுத்தின என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை சம்பவத்தால் ஏற்பட்ட வேதனையான வடுக்களை இன்னும் குணப்படுத்தத் தவறிய ஒரு நாட்டில், இத்தகைய சூழ்நிலையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

எனவே இவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதில், நாட்டின் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றுக்கு வலுவான பொறுப்பு உள்ளது என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!