அமெரிக்காவில் எவ்வித உணர்ச்சியுமின்றி படுக்கையில் இருந்த பெண் திடீரென கண் விழித்த ஆச்சரியம்!

அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக எவ்வித உணர்ச்சியுமின்றி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் திடீரென குணமடைந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் பல்கலை ஒன்றில் பயின்றுவந்த April Burrell என்னும் இளம்பெண், தனது 21ஆவது வயதில் அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வை தன் வாழ்வில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, psychosis என்னும் மனநல பிரச்சினைக்கு ஆளானார்.
    
அதன் தொடர்சியாக பேசவோ, தானாக குளிப்பது, உடை மாற்றுவது முதல் எந்த அன்றாட செயல்களையும் செய்யவோ இயலாத நிலைக்கு ஆளான ஏப்ரல், 1995ஆம் ஆண்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது குடும்பத்தினர் உட்பட அன்பிற்குரியவர்கள் யாரையும் அவரால் அடையாளம் காண இயலாமல் போய்விட்டது. 2000ஆம் ஆண்டு, Sander Markx என்னும் மருத்துவ மாணவர் ஏப்ரலை சந்தித்துள்ளார். 2018ஆம் ஆண்டு, ஏப்ரலுக்கு Lupus என்னும் பாதிப்பும் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர் Sander தலைமையிலான மருத்துவக் குழுவினர்.

அதைத் தொடர்ந்து பல மாதங்கள் அவர்கள் ஏப்ரலுக்கு Lupus பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு திடீரென கண்விழித்துள்ளார் ஏப்ரல். பின்னர், ஏப்ரல் மன நலம் தேறிவிட்டார் என மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டு மன நல மருத்துவமனையிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். என்றாலும், கோவிட் கட்டுப்பாடுகளால் அவரது குடும்பத்தினர் ஏப்ரலை சந்திக்க இயலாமல் போயுள்ளது.

கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டபின் ஏப்ரலைக் கண்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்கள். சிறு வயதில் நிகழ்ந்த விடயங்களைக் கூட நினைவில் வைத்துள்ளாராம் ஏப்ரல். இந்த விடயத்தில் இன்னொரு முக்கியத்துவம் என்னவென்றால், ஏப்ரலைபோலவே பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு Lupus பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதன்மூலம், அவர்களை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது என்பதுதான்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!