பெரிய காகம் தான் அரசாங்கத்தை பாதுகாக்கிறது!

கடந்த ஆண்டு நாட்டு மக்கள் கபுடு கா,கா என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள். மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
    
மக்களால் வெறுக்கப்பட்டு குறுகிய காலம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகி இருந்தவர்களுக்கு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும் அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என்றார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
“சர்வதேச நாணய நிதியம், சர்வதேசம் ஆகியவற்றின் அழுத்தங்களுக்கு அமையவே தற்போது சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சட்டங்களை இயற்றி விட்டோம் என்று சர்வதேசத்திடம் குறிப்பிட்டு விட்டு அரசாங்கம் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறது. இயற்றப்படும் சட்டங்கள் ஏதும் முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. பொறுப்புக் கூறல் விவகாரத்தில் இலங்கை அசமந்தகரமாக செயற்படுவதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதுவே உண்மை பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் இலங்கை சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஊழல் மோசடி நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு பிரதான காரணியாக இருந்தது. மோசடி செய்யப்பட்ட அரச நிதி மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினார்கள். இந்த கோரிக்கை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே.

மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் குறுகிய காலம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகி இருந்தார்கள். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. எனவே அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது” என்றார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!