இந்தியப் பிரதமர் மோடிக்கு இவ்வாரம் கடிதம் அனுப்புகிறது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு!

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதமொன்றை இவ்வார இறுதிக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
    
இக்கடிதத்தினை ஏனைய தரப்புக்களான இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தரப்புக்களுடனும் கூட்டிணைந்து அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த கடித விடயம் சம்பந்தமாக தெரிவிக்கப்படுவதாவது :

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இம்மாதம் 21ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, தமிழர்களின் தேசிய பிரச்சினை மற்றும் அன்றாட பிரச்சினைகள் மையப்படுத்தப்பட்டு, அவற்றை தீர்ப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற விடயம் குறிப்பிடப்படவுள்ளது.

அத்துடன், அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதும் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, மாகாண சபைகளுக்கான தேர்தலையும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக காலம் தாழ்த்தியுள்ளது என்ற விடயமும் குறிப்பிடப்படவுள்ளது.

இதேவேளை, பௌத்த மதத்தின் பெயராலும் தொல்பொருளின் பெயராலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய வரலாற்றுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

தற்போது குறித்த கடிதத்துக்கான வரைவு, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்துக்குள் அது இறுதி செய்யப்படவுள்ளது. இந்தக் கடிதத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையொப்பங்களை இடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!