மொட்டின் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர் தான் அடுத்த ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
    
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தான் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக நியமித்தது. இது தொடர்பாக நாம் அவருடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளவில்லை. நாம் நம்பும் கொள்கைகள் மாறுபட்டவையாகும்.

எமது கட்சியானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு தலைவரைத்தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவோம். நாட்டின் பொருளாதார நிலைமையை பழைய நிலைமைக்குக் கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து வருகிறார். எனினும், நாட்டின் பொருளாதாரத்தை பழைய நிலையில் கொண்டு வருவது அன்றி, அதனைவிட உயர்த்தும் ஒரு தலைவரையே நாம் கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொருளாதாரக் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவர்தான் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இன்றும் ஒரு வருடமும், இரண்டு மாதங்களும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இருக்கும் நிலையில், கட்சி என்ற ரீதியில் அவசரப்பட்டு தற்போதே வேட்பாளரை தெரிவுசெய்ய வேண்டியதில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!