திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்டு பயனில்லை!

மக்கள் பிரதிநிதிகள் 225 பேரும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களித்துள்ளனர். ஆகவே, திருடனின் தாயிடம் திருடன் யார் என சாஸ்திரம் கேட்டு பயனில்லை என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
    
நாட்டின் நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராக சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் விடுத்த அறிவிப்பு தொடர்பில் இடம்பெற்ற தர்க்கத்தின் போது, ”நாடு வங்குரோத்து அடைந்தமை குறித்து தேடிப்பார்க்கும் விசேட குழுவின் தலைவராக அரச தரப்பு எம்.பி.யான சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். இது திருடனின் தாயிடம் திருடன் யார் என சாஸ்திரம் கேட்பது போன்றது” என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

“இந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது உதவுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் சில சமயங்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகின்றன. வரியைக் குறைக்கும் போதும் ஏசுகிறார்கள். அதிகரித்தாலும் ஏசுகிறார்கள். அந்த நபர்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.

ஓர் அரசாங்கம் மட்டுமல்ல, 225 மக்கள் பிரதிநிதிகளும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களித்துள்ளனர். எனவே, திருடனின் தாயிடம் திருடன் யார் என சாஸ்திரம் கேட்டும் பயனில்லை. இதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் சபையின் பணிகளைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!