பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
    
இதனையடுத்து விளக்கமளித்த ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்கள், ஜனாதிபதி ஒன்றும் சமூக ஊடக செயற்பாட்டை மொத்தமாக முடக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கவில்லை, மாறாக கலவரங்களை தடுக்க தற்காலிகமாக தடை செய்யவே கோரிக்கை வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞர்கள் சமூக ஊடகங்களை கருவியாக பயன்படுத்தி நாடு முழுவதும் கலவரம் மற்றும் வன்முறையை தூண்டுவதாக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டிய நிலையிலேயே, ஜனாதிபதி மேக்ரான் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகஙக்ளை தற்போதைய தலைமுறை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மேக்ரான், எந்த பிரச்சனையும் நமது கை மீறும் போது நாம் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது அவற்றை துண்டிக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய கலவரம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 250 மேயர்களை சந்தித்த மேக்ரான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால், இப்படியான ஒரு நெருக்கடியை உருவாக்குவது முறையல்ல, நமது திட்டமும் அதுவல்ல என குறிப்பிட்டுள்ள மேக்ரான், இந்த விவகாரம் தொடர்பில் உரிய விவாதம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
ஆனால் இதுபோன்ற ஒரு நடவடிக்கை சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா போன்ற சர்வாதிகார நாடுகளுடன் பிரான்ஸை இணைத்துவிடும் என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.