இமோஜியால் கனேடியருக்கு ஏற்பட்ட பிரச்சனை!

இமோஜி ஒன்றை அனுப்பியதால் கனேடியர் ஒருவர் 82,000 டொலர்கள் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவின் Saskatchewanஐச் சேர்ந்த விவசாயி Chris Achter. அவரிடம், Kent Mickleborough என்பவர், ஆளி விதை வாங்குவது தொடர்பாக தொலைபேசியில் பேசியுள்ளார். தனக்கு 86 டன் ஆளி விதை தேவை என்று கேட்டு, ஒப்பந்தம் ஒன்றை அவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, ஒப்பந்தத்தை உறுதி செய்யுமாறு Chrisஇடம் கோரியுள்ளார் Kent. பதிலுக்கு ’thumbs-up’ இமோஜி ஒன்றை அனுப்பியுள்ளார் Chris.
    
ஆளிவிதை வரும் என Kent காத்திருக்க, குறிப்பிட்ட திகதியில் விதை வந்து சேரவில்லை. கோபமடைந்த Kent நீதிமன்றம் சென்றுவிட்டார்.

தானும் Chrisம் நீண்ட காலமாக பிசினஸ் செய்துவருவதாக தெரிவித்துள்ள Kent, இதற்கு முன்பும் குறுஞ்செய்திகள் மூலம் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்ட அவர், இப்போதும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதன் அடையாளமாகத்தான் அந்த இமோஜியை அனுப்பியதாக தான் கருதியதாகவும், ஆனால், அவர் விதை அனுப்பவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், தனக்கு Kentஇன் குறுஞ்செய்தி வந்துவிட்டது என்பதை உறுதிசெய்வதற்காகத்தான் தான் இமோஜி அனுப்பினேனேயொழிய, ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் பொருளாக அதை அனுப்பவில்லை என வாதிட்டுள்ளார் Chris.

வழக்கில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு, பலரையும் இமோஜிகள் குறித்து யோசிக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆம், நீதிமன்ற வரலாற்றில் எப்போதும் மறக்கமுடியாத வகையில், Kentக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி Timothy Keene என்பவர்.

தான் இமோஜியின் அர்த்தத்தைக் கூறும் Dictionary.com என்னும் இணையதளத்தை ஆராய்ந்தபோது, அதில், சம்மதம், ஒப்புதல், டிஜிட்டல் தொலைதொடர்பில் ஊக்குவிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தவே ’thumbs-up’ இமோஜி பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார் நீதிபதி Timothy Keene.

ஆகவே, அந்த ’thumbs-up’ இமோஜியை டிஜிட்டல் கையொப்பமாக கருதலாம் என்று கூறியுள்ள நீதிபதி, ஒப்பந்தத்தை மீறியதற்காக Chris, Kentக்கு 82,000 கனேடிய டொலர்கள் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!