எதிர்க்கட்சிகளின் சுயாதீன தெரிவுக்குழு! – சஜித் யோசனை.

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களை இனங்காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய தெரிவுக்குழு செயற்திறன் மிக்கதாகக் காணப்படாது. எனவே தனது தலைமையில் பொருளாதார சீரழிவுக்கான காரணங்களை கண்டறிய எதிர்க்கட்சியின் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
    
எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம் பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் ஏற்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கு ஏதுவாக அமைந்த காரணங்களை வெளிப்படையாகக் கண்டறிந்து யதார்த்தங்களை தெரிந்து கொள்ளும் முகமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் யோசனையின் பிரகாரம் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இந்த தெரிவுக்குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதன் பின்னனியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும். பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பை நிரபராதியாக்கி அவர்களை சரிகாணும் செயற்பாடுமே இதன் ஊடாக இடம்பெறும் என்பது தெளிவாக புலப்படுகிறது.

கடந்த வார பாராளுமன்ற அமர்வில் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதை மேலும் இரு வாரங்களுக்கு இழுத்தடிப்புச் செய்யும் பிரயத்தனத்தை முன்னெடுத்தனர். எதிர்க்கட்சியில் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் எதிர்க்கட்சியின் முயற்சியால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகலருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இந்த தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிலிருந்து விலகி எதிர்க்கட்சியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சபாநாயகர் அண்மையில் தெரிவித்ததன் பிரகாரம், எதிர்க்கட்தித் தலைவருக்கு பாராளுமன்றத்தில் சிறப்புரிமைகள் காணப்படுகின்றமையினால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் இந்த பொருளாதார சீரழிவுக்கான காரணங்களை கண்டறிய எதிர்க்கட்சியின் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபித்து இதனை முன்கொண்டு செல்வோம்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கின்றேன். சகலருக்கும் இதில் கேள்வி எழுப்பும் சந்தர்ப்பம் காணப்படுகிறது. இதற்கு எத்தகைய தடைகளும் இல்லை. நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்கான காரணங்களை கண்டறியும் அரசாங்கத்தின் தெரிவுக்குழுவிற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும்.

சபாநாயகருக்கு இது குறித்து சிறிதேனும் நியாயப்பாடு இருந்திருந்தால் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரையே நியமித்திருக்க வேண்டும். மறைந்த ஜனாதிபதியான தனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் தெரிவுக் குழுவொன்றுக்கு எதிர்க்கட்சியின் மங்கள முனசிங்க நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு முண்ணுதாரணங்கள் காணப்படுகின்றன என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!