6 தமிழ் கட்சிகளின் கடிதம் இன்று அல்லது நாளை இந்தியதூதுவரிடம் கையளிப்பு!

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு – இந்தியாவுக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினால் தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் இன்று அல்லது நாளை இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
    
இக்கடிதத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் அங்கம்வகிக்கும் 5 கட்சிகளும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும் கையெழுத்திட்டிருக்கும் இக்கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கையெழுத்திடவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மேற்கொண்டிருப்பதுடன் இம்முயற்சியில் ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

அதன்படி இக்கடிதம் தயாரிக்கப்பட்டு அதில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் புளொட், ரெலோ, ஈபி.ஆர்.எல்.எப், ஜனநாயகப் போராளிகள் மற்றும் தமிழ்த்தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளின் தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

அதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரிடமும் இக்கடிதத்தில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டிருந்த நிலையில், விக்னேஸ்வரன் அதில் கையெழுத்திட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுடன் இதுகுறித்துத் தாம் கலந்துரையாடியதாகவும், இருப்பினும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்துவதை அவர்கள் விரும்பாததுபோல் தெரிவதாகவும், எனவே இக்கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடவில்லை என்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் தாம் கையெழுத்திட்டிருப்பதாகவும், இன்று அல்லது நாளை அக்கடிதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!