அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் அதிபர்கள் கிரிமினல்கள் – ஈரான் தலைவர் கமேனி ஆவேசம்

சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை விமர்சித்துள்ள ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் அயாத்துல்லா கமேனி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு அதிபர்களை ‘கிரிமினல்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது.

உள்நாட்டு போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.

கடந்த 7-ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரியா அரசு படைகள் முற்றுகையிட்டன.

கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் சுமார் 70 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமனப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த தாக்குதலை அமெரிக்காவின் பகைநாடான ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது. ஈரான் நாட்டின் மிக முக்கியமான மதத்தலைவரும் ஆட்சி பொறுப்பில் இல்லாவிட்டாலும் அந்நாட்டு அரசின் முடிவுகளில் அதிகாரம் மிக்கவருமான அயாத்துல்லா அலி கமேனி, ‘சிரியா மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் குற்றச்செயலாகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த குற்றத்தை இழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் அதிபர் தெரசா மே மற்றும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை கிரிமினல்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!