சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு! – சுமந்திரன் அறிக்கை.

இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு பகுதியாகக் காணப்படும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கூட, ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் தரப்பினால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
    
இது அரசியலமைபை முழுமையாக மீறுவதாக அமையும் எனக் கூறியுள்ள எம்.ஏ.சுமந்திரன், அரசியலமைப்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், நீண்டகாலமாக தாமதமாகிவரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடுகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கையொப்பத்துடன் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள், 1956 ஆம் ஆண்டு முதல், வடக்கு – கிழக்கில் சமஷ்டி ஏற்பாட்டின் மூலம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நோக்கிச் செயற்படுவதற்கான ஆணையை, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கியுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வடக்கு கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் உள்ளடங்கலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருந்தது என எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

மேலும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும், இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு சுயமரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் ஆகியன இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதனை எளிதாக்குவதற்கும் இன்றியமையாத கூறுகளாகும் என பிரதமர் தெளிவாகக் கூறியிருந்தார் எனவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவே தமது நிலையான நிலைப்பாடாக இருந்து வருவதுடன், இது இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போதும் முன்வைக்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1956 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தப்படும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இணங்க, சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!