7 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம்!

இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
    
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளதுடன் அந்நியச் செலாவணியை அதிகரிக்க உதவியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

கடந்த வருடம் இந்நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக உள்நாட்டு வர்த்தகங்கள் மாத்திரமன்றி சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களால் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வருடம் இதுவரை சுமார் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், அது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 205% சதவீத வளர்ச்சியாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!