வடக்கில் வீதி விபத்தை குறைப்பது தொடர்பாக கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
    
இந்நிலையில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகளின் நேரடி, இணையவழி பங்குபற்றுதலுடன் ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட யாழ் போதனா வைத்தியசாலை எலும்பியல் வைத்திய நிபுணர் கோபிசங்கர் மேல் மாகாணத்துக்கு அடுத்தபடியாக அதிக வீதி விபத்துக்கள் இடம்பெறும் மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுவதாக கூறினார்.

போதியளவு வீதிப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை, வர்த்தக நிலையங்கள் சந்தைப்படுத்தலுக்காக வீதிகளை பயன்படுத்துகின்றமை, முறையற்ற வாகனத்தரிப்பிடங்கள், நடைபாதையற்ற வீதிகள் முதலிய பலவும் இதற்குப் பிரதான காரணமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவற்றைக் கேட்டறிந்த ஆளுநர். வர்த்தக நிலையங்களுக்கு முன்னே விளம்பரங்கள் செய்ய வீதிகளை பயன்படுத்துதல், வாகனங்களை நிறுத்துதல் முதலியவற்றால் பாதசாரிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், எனவே இவற்றைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!