உள்நாட்டு மரக்கறிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதியில்லை: அமைச்சர் அமரவீர

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை அங்கீகரிக்கும் அதிகாரம் விவசாய அமைச்சுக்கு இருக்கும் வரை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளார்.

மாத்தளையில் நேற்று (06.08.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது, இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், இறைச்சி மற்றும் முட்டைகளுக்கான உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்கள், விவசாய அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள  பிரிவினால் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக எந்த ஒரு விவசாயியும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.
நாட்டில் போதுமான அளவு மரக்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன், நாட்டில் காய்கறிகளுக்கு பஞ்சமில்லை.

அண்மையில் உள்ளடக்கப்பட்ட சுமார் 300 பொருட்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கிய பின்னர் கவலைகள் எழுந்துள்ளது. இவ்வாறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும் பல விடயங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார். உள்நாட்டில் விளைவிக்கக்கூடிய மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சு அனுமதி வழங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!