பொலிசாரும், சாந்தபோதி தேரரும் குழப்ப முயற்சி!

பொலிசார் மற்றும், சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தொடர்ந்தும் இந்தப் பொங்கல் வழிபாடுகள் குருந்தூர்மலையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். குருந்தூர்மலையில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த பொங்கல் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றாலும் சில குழப்ப முயற்சிகளும் இங்கு முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் பொங்கல் வழிபாடுகளுக்குரிய பொங்கல் பொருட்களை ஏற்றிவந்த உழவியந்திரம் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டதோடு குருந்தூர் மலைப் பகுதிக்குள் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் உடனடியாக நாம் பொலீசார் வழிமறித்த இடத்திற்குச் சென்று எமது தலையீட்டுடன் அந்த பொங்கல் பொருட்களை எடுத்து வந்து இங்கே பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டோம்.

அவ்வாறு பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோது சுற்றியிருந்த பொலிசாரின் பாதுகாப்புக்களையும் மீறி எமது வழிபாட்டுப் பகுதிக்குள் நுழைந்த கல்கமுவ சாந்தபோதி தேரர் எமது வழிபாடுகளைக் குழப்ப முயன்றார். எனினும் எமது மக்கள் அவரை அங்கிருந்து வெளியேறமோறு கோசமிட்டனர். அதனைத் தொடர்ந்து பொலிசாருடைய தலையீட்டுடன் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகவும், தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக இந்த பொங்கல் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பொங்கல் வழிபாடுகள் இனியும் தொடர்ந்து குருந்தூர்மலையில் இடம்பெறும். அதற்குரிய தினங்களை நாம் தொடர்ந்து அறிவிப்போம், அந்த தினங்களில் இங்கு பொங்கல் வழிபாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!