13 முள்ளில் விழுந்த சேலை என்கிறார் டக்ளஸ்!

நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் கூப்பாடு போடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
    
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பயனாக இலங்கையில் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் தற்போது முற் செடியில் மாட்டிய சேலையைப் போல் உள்ள நிலையில் அதனை கிழியாமல் எடுத்து செய்ய வேண்டியதை செய்வதே எமது இலக்கா இருக்க வேண்டும்.

இதை ஏன் நான் உதாரணமாக கூறினேன் என்றால் பதின்மூன்றுக்கு எதிரானவர்கள் தென் இலங்கையில் இருக்கின்ற நிலையில் பதின்மூன்று தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் ஆரவாரப்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் நான் இலங்கைக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதற்காக தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கம் ஊடாக பிரச்சனை அணுகுதலை இன்று வரை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.

பிரேமதாச காலத்தில் வாகனங்களில் (சிறீ) எழுத்துப் பதிவிடுவது தமிழ் மக்களின் முதலாவது போராட்டமான சிறீ எதிர்ப்பு போராட்டத்தை அப்போதைய தமிழ் தலைவர்கள் முன்னெடுத்தனர்.
ஆனால் குறித்த போராட்டத்தை நீடிக்க விடாமல் இரவோடு இரவாக பிரேமதாசா அரசாங்கத்தோடு கச்சிதமாக பேசி கலவரங்கள் ஏற்படாத வகையில் (சிறீ ) தீர்மானத்தை இல்லாமல் செய்தோம்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் நமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலையில் அவர்களின் விருப்பத்தை மீறி தீர்மானங்களை மேற்கொள்வது கஷ்டமான காரியம். அதேபோன்றுதான் 13 வது திருத்தம் தொடர்பில் சிங்கள மக்களை குழப்புவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களின் உசுப்பேத்தல்களுக்கு தமிழ் தரப்புகள் கூக்காடு போட்டால் அரசாங்கத்துக்கு இடையூறுகள் ஏற்படும்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான ஆரம்ப கட்ட தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.
பதின்மூன்றை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்ற நிலையில் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நடைமுறைப்படுத்த முடியும். ஆகவே பதின் மூன்று தொடர்பில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து தந்திரமான முறையில் அதனை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!