கஜேந்திரகுமார் வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்! – டிலான் பெரேரா கோரிக்கை.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றிவளைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுயாதீன எதிரணி எம்.பியான டிலான் பெரேரா சபையில் கோரிக்கை விடுத்தார்.
    
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இலங்கை கிரிக்கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற்றது. அதன் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றிவளைக்கவுள்ளதாக குழுவொன்று அறிவித்துள்ளமை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே டிலான் பெரேரா இவ்வாறு கோரிக்கை விடுத்தார். “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, நாளை (இன்று) பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வர வேண்டும் என்ற போதும், அவரால் வர முடியாது என்று கூறியுள்ளார்.

அதற்கு காரணம் அவரின் கொழும்பிலுள்ள வீட்டை குழுவொன்று சுற்றி வளைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் சென்றே இவ்வாறு சுற்றிவளைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமே. கஜேந்திரகுமார் எம்.பியின் தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டவராக இருக்கின்றார். இது தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொருக்கும் வேண்டியவாறு எம்.பிக்களின் வீடுகளை சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது.

இதனால் தயவு செய்து அவருக்கும், அவரின் வீட்டுக்கும் தேவையான பாதுகாப்பை உடனடியாக அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் சமன் பிரிய ஹேரத், இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!