நாட்டை இராணுவ மயப்படுத்தவே அரசாங்கம் முனைகிறது – மஹிந்த

சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கி அதன் மூலம் நாட்டை இராணுவ மயப்படுத்தி வேறுவிதமான ஆட்சி முறையை ஏற்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவும் ஜனநாயக கோட்பாடுகளில் மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. ஆகவேதான் நாட்டையும் மக்களையும் பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்கு நாம் போராடி வருகிறோம்.

ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றான தேர்தலை நடத்துவதாக இல்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நீண்ட நாட்கள் நடத்தாது காலம் தாழ்த்தினர். அதேபோல் மாகாண சபைத் தேர்தலையும் நடத்தாது காலம் தாழ்த்துகின்றனர்.

தேர்தலை நடத்த வேண்டும் என்கின்ற தேவை அரசாங்கத்திடம் இல்லை. ஏனெனில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்தது. எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தோல்வியை சந்திக்க வேண்டிவரும் என்கின்ற அச்சத்தினாலேயே இழுத்தடிப்புச் செய்கின்றனர் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!