சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க சிறப்பு போர் படைகள் நான்கு வாரப் பயிற்சி

சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படையணிகளுக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படை அதிகாரிகள் அளித்து வந்த பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன.

கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ், Flash Style 2018/01 பெயரில், திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படைகள் பயிற்சி அளித்து வந்தன.

4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த 26 கடற்படையினர், மற்றும் சிறப்பு படகு படையணியைச் சேர்ந்த 36 கடற்படையினருமாக, மொத்தம் 62 சிறிலங்கா கடற்படையினருக்கு நான்கு வாரங்கள் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஜூலை 17ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சிகளின் நிறைவு நிகழ்வு கடந்த 10ஆம் நாள் இடம்பெற்றது.

அமெரிக்கா- சிறிலங்கா இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள பயிற்சி மற்றும் ஆதரவு தேவைகள் தொடர்பாக பரஸ்பர புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு அமைய இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படைகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளும், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!