விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு

விமானப் பயணத்தின் போது மது அருந்தியதற்காக பெண் வைத்தியர் எல்லி ஹோல்மேன் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் வைத்தியரான இவர், லண்டனிலிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் கடந்த ஜூலை 13ஆம் திகதி தன் 4 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப்பட்டுள்ளது. எல்லி அதை அருந்தியிருக்கிறார்.

இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல் மேனின் விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்குள், பயணத்தில் மது அருந்தியது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது, எல்லி ஹோல் மேனின் மொபைல் போனையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனிடையில், மது அருந்தியதை உறுதி செய்ய அவருக்குப் பரிசோதனையும் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, எல்லி ஹோல் மேனை கைது செய்த அதிகாரிகள், அவரின் 4 வயது குழந்தையுடன் சிறையில் அடைத்துள்ளனர். இதன் பின்னரே விவரம் அறிந்த எல்லியின் கணவர் துபாய்க்குப் புறப்­பட்டுச் சென்றுள்ளார்.

தன் மனைவி மற்றும் குழந்தையை பிணையில் எடுத்துள்ளார். `சிறையில் உரிய உணவு வழங்கவில்லை. மாற்று உடை தரவில்லை எனவும் கழிவறை மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும் மூன்று நாள் சிறையில் அனுபவித்த கொடுமைகளைக் கூறியுள்ளார் எல்லி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தற்போது, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!