சீனாவில் அச்சிடப்படுகிறதா சிறிலங்கா நாணயத் தாள்கள்? – மறுக்கிறது மத்திய வங்கி

சிறிலங்கா நாணயத் தாள்கள் சீனாவில் அச்சிடப்படுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டில் வெளியாகிய தகவல்களை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரித்துள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் நாணயத் தாள்களை சீனாவில் உள்ள நாணயத் தாள் அச்சிடும் நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைவரான லியூ கியூசெங் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கொழும்பு ஊடகம் ஒன்று சிறிலங்கா மத்திய வங்கியுடன் தொடர்பு கொண்டு, வினவிய போதே, சிறிலங்கா நாணயத் தாள்கள் சீனாவில் அச்சிடப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளை நிராகரித்துள்ளது.

1986ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா நாணயத் தாள்கள், டி லா ரூ நிறுவனமும் சிறிலங்கா அரசாங்கமும் இணைந்து உருவாக்கிய, கூட்டு முயற்சி நிறுவனமான, டி லா ரூ லங்கா நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!