மகிந்தவிடம் நாளை விசாரணை – வாக்குமூலம் அளிக்க இணங்கினார்

த நேசன்’ நாளிதழின் இணை ஆசிரியராக இருந்த கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாளை வாக்குமூலம் அளிப்பதற்கு இணங்கியுள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு, இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக, மகிந்த ராஜபக்ச நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.

உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரின் தலைமையில், கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் செல்லும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு, அவரிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ளும்.

முன்னதாக நான்கு தடவைகள், மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் அதற்குப் பதிலளிக்காத நிலையிலேயே, மகிந்தவின் இல்லத்துக்கே சென்று விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, காவல்துறை ஊடாக வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னர் தாம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் அனுப்பியதாகவும், இப்போது, அதனை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தப்படுவதாகவும், மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!