வெண்சுருட்டு விற்பனையை நிறுத்திய 107 நகரங்கள் – யாழ்ப்பாணம் முன்னணியில்

சிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

புகையிலை இல்லா நாட்டை உருவாக்கும் இலக்கை அடையும் நோக்கில், 100இற்கும் அதிகமான நகரங்களில் உள்ள விற்பனையாளர்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.

சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட தீவிர பரப்புரையை அடுத்து, வணிக நிலையங்கள் மற்றும் வணிகர்கள் வெண்சுருட்டு விற்பனையை நிறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 22 நகரங்களிலும், மாத்தறையில் 17 நகரங்களிலும், குருநாகலவில் 16 நகரங்களிலும், வெண்சுருட்டு விற்பனை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது 107 நகரங்கள் இந்த முடிவில் இணைந்துள்ளன.

2019ஆம் ஆண்டில் இந்த நகரங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புகையிலைப் பொருlட்களுக்கு 90 வீதம் வரை வரி அதிகரிக்கப்பட்டதுடன், வெண்சுருட்டுப் பொதிகளில் 80 வீதம் எச்சரிக்கை படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் இருந்து 100 மீற்றர் சுற்றாடலில் வெண்சுருட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதுடன், பொதுஇடங்களில் புகைப்பதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2020இல் புகையிலை பயிர்ச்செய்கையை தடை செய்வதற்கும் சிறிலங்கா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!