போர்க்கப்பலை பொறுப்பேற்க அமெரிக்கா சென்று ஏமாந்த சிறிலங்கா அதிகாரிகள்

அமெரிக்க கடலோரக் காவல்படையிடம் இருந்து ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ என்ற போர்க்கப்பலைப் பொறுப்பேற்க ஹவாய்க்குச் சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ என்ற போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படைக்கு வழங்க அமெரிக்கா இணங்கியிருந்தது.

இதற்கமைய, ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் அந்தப் போர்க்கப்பலில் மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த்துடன், அதில் சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளையும் பெற்று வந்தனர்.

இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படையிடம், நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அமெரிக்க அதிகாரிகளிடம் கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைப் பொறுப்பேற்பதற்காக, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவும் ஹவாய்க்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ போர்க்க்ப்பலுக்குச் சென்றிருந்த போதும், அதனைக் கையளிக்கும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

ஹவாய் தீவு தற்போது லேன் என்ற சூறாவளியினால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூறாவளி நேற்று முன்தினம் ஹவாயை நோக்கி வந்து கொண்டிருந்ததால், அங்கு அதற்கான தயார்படுத்தல்களே முன்னுரிமை கொடுக்கப்பட்டன.

இதனால், ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ கப்பலை சிறிலங்காவிடம் கையளிக்கும் நிகழ்வை அமெரிக்க அதிகாரிகள் பிற்போட்டனர்.

இந்த நிகழ்வு பிற்போடப்பட்டதால், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவும் ஏமாற்றமடைந்தனர்.

எனினும், இந்த மாத இறுதியில் யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!