“மாநகரசபையின் செயற்பாடுகளைக் குழப்பும் நடவடிக்கை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும்“

கொழும்பு மாநகரசபையின் நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் செயற்பட்டமை முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும் எனவும், இவ்விடயம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் இம்மாதத்திற்கான கூட்டம் மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகரசபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதனால் சபையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும், பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

சபையின் நடவடிக்கைகள் ஆரம்பித்ததிலிருந்து பொதுஜன பெரமுன உறுப்பினர்களான கபுகீகியனகே குலதிஸ்ஸ மற்றும் ஆர்.பி.பி.என்.சம்பத் ஆகியோர் எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சை எழுப்பியவாறு தொடர்ந்து கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, ரோஸி சேனாநாயக்கவினால் குலதிஸ்ஸ வெளியேற்றப்பட்டார். அவருடன் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஏனைய உறுப்பினர்களும் வெளியேறினர்.

மாநகரசபை கேட்போர்கூடத்திலிருந்து வெளியேறிய பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மாநகரசபை வாயிலை மறித்தவாறு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கொழும்பு மாநகரசபை மேயர் ஹிட்லர் எனவும், நல்லாட்சி அரசாங்கத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் பதாதைகளை ஏந்தியிருந்ததோடு, கோத்தாபய ராஜபக்ஷவே கொழும்பு நகரைத் தூய்மையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

அதன்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஷர்மிலா ஜயவர்தன் கோனவல கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு மாநகரசபையில் பெருமளவு ஊழல்கள் இடம்பெறுகின்றன. மீத்தொட்டமுல்ல குப்பைமேடு விவகாரம் தொடர்பில் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலில்லை. மக்களின் வாக்குகள் மூலம் தெரிவாகியுள்ள மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்வதை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே சபையினைக் குழப்பும் நடவடிக்கை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தின் போது சபை நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் பொதுஜன பெரமுன உறுப்பினர் குலதிஸ்ஸ நடந்துகொண்டமை திட்டமிட்ட செயற்பாடாகும். அவர் மாநகரசபைக்கும், சபை உறுப்பினர்களின் மரியாதைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டதுடன், மாநகரசபை உறுப்பினர் ப்ரியாணி குணரத்ன உரையாற்றுவதற்கு இடமளிக்காமல், அவரை கையால் தள்ளி வற்புறுத்தி அமர வைத்தார். பெண் உறுப்பினரிடம் இவ்வாறு நடந்துகொண்டமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அத்தோடு தொடர்ந்தும் கூச்சல் எழுப்பியவாறு சபையில் குழப்பம் விளைவித்தமையால் அவரை மாத்திரம் சபையைவிட்டு வெளியேறுமாறு கூறினேன். ஆனால் அவருடன் ஏனைய பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் வெளியேறி விட்டனர். இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!