வெங்கலச் செட்டிக்குளத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம் இழந்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய வவுனியா- வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையின் அதிகாரத்தை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது.

நேற்று பிற்பகல் நடந்த சபையின் அமர்வில் தவிசாளர்பதவிக்காக 3 பேர் போட்டியிட்டனர்.

இதன்போது. சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி 7 வாக்குகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சு .ஜெகதீஸ்வரன் 5 வாக்குகளையும், தமிழர் விடுதலை கூட்டணியின் யேசுதாஸ் டெல்சன் 3 வாக்குகளையும் பெற்றனர்.

இதனால், குறைந்த வாக்குகள் பெற்ற தமிழர் விடுதலை கூட்டணியின் டெல்சன் நீக்கப்பட்டு, ஏனைய இருவருக்கும் இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 4பேரும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 2 பேரும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஒருவரும் ஆசிர்வாதம் அந்தோணி க்கு வாக்களித்தனர்.

ஜெகதீஸ்வரனுக்கு கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.

இதனால் ஆசிர்வாதம் அந்தோணி தவிசாளராக தெரிவு செய்யபட்டார்.

இதையடுத்து உப தலைவர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நவரட்ணம் சிவாயினியும், கூட்டமைப்பு சார்பில் சி.அருள்கரனும் போட்டியிட்டனர்.

இதில் சிவாயினி 7 வாக்குகள் உபதலைவராக தெரிவு செய்யபட்டார். அருள்கரன் 6 வாக்குகள் பெற்றார்.

தலைவர் மற்றும் உப தலைவருக்கான தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நடுநிலை வகித்திருந்தார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் மூன்று உறுப்பினர்கள், தலைவர் தெரிவின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பிலும், உபதலைவருக்கான வாக்கெடுப்பிலும் நடுநிலை வகித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!