ஐ.நாவின் சிறப்பு நிபுணர் சிறிலங்கா வருகிறார்

வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி அடுத்தவாம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், எதிர்வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் கொழும்பு வரும் அவர், 11 ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து நிலைமைகளை அவதானிப்பார்.

தமது பயணத்தின் நோக்கம், தகவல்களை சேகரித்து, மனித உரிமைகள் நிலைப்பாட்டிலிருந்து கடன் மற்றும் பிற நிதிய கடப்பாடு தொடர்பான கேள்விகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துலக சமூகம் உள்ளிட்ட அனைத்துப் பங்காளர்களுடனும் தான் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

இந்தப் பயணத்தின் முடிவில், எதிர்வரும் செப்ரெம்பர் 11ஆம் நாள் காலை 11 மணிக்கு, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் அவர் நடத்த திட்டமிட்டுள்ளார்.

இவர் தமது விரிவான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2019 மார்ச் மாதம் சமர்ப்பிப்பார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!