தீவிரவாதி என கூறி தமிழ்ப் பெண் கடத்தப்பட்டு கூட்டுபாலியல் வன்புணர்வு! – இரு சிங்களவர்களுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்று கூறி தமிழ் பெண் ஒருவரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவருக்கு 30 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அனுராதபுரம் – தேவநம்பியதிஸ்ஸபுர, நிராவிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 68 வயதுடைய இரண்டு பேருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குற்றங்களுக்கும் 10 ஆண்டுகள் வீதம் 30 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50,000 ரூபாய் வீதம் தனித்தனியே நஷ்ட ஈடு செலுத்தவும், மேலதிகமாக 4,000 ரூபாய் வீதம் இருவரும் தனித்தனியே அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் 15 மாதங்களுக்கு சிறை தண்டனை அனுப்பவிக்க நேரும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1998ஆம் ஆண்டு நிராவிய பிரதேசத்தில் வைத்து 25 வயதுடைய தமிழ் பெண் ஒருவர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என தெரிவித்து அவரை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!