பிரிட்டனில் முதல் முறையாக… இறந்துபோன மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தையை உருவாக்கிய பெற்றோர்

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களின் மகன் இறந்துபோனதையடுத்து அவனது விந்தணுவை பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் பேரக்குழந்தை பெற்றுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒரே மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தான். இதனால் நிலைகுலைந்துபோன அந்த தம்பதி, தங்கள் மகன் மூலமாக ஒரு வாரிசை பெற்றெடுக்க விரும்பினர். கரு முட்டைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் நவீன முறை குறித்து அந்த தம்பதியர் அறிந்திருந்தனர்.

இதனால், மகன் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக, அவனது விந்தணுவை எடுத்து பதப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி சிறுநீரகவியல் நிபுணர் ஒருவர் மூலம், விந்தணு எடுக்கப்பட்டு, உறைநிலையில் பதப்படுத்தப்பட்டது. ஆனால் பிரிட்டனில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சட்டவிரோதம் ஆகும். எனவே, அந்த விந்தணுவை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்க விந்து செல்களுடன் தானமாக பெறப்பட்ட கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு வளர்க்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் கடந்த 2015ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். பின்னர் அந்த குழந்தையின் சட்டப்பூர்வ பெற்றோராக அறிவித்து, பிரிட்டன் திரும்பினர். தற்போது 3 வயதான அந்த குழந்தையை பிரிட்டனில் வளர்த்து வருவதாக நம்பப்படுகிறது.

அதேசமயம், சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கிய பேரக்குழந்தையை பிரிட்டனில் வளர்ப்பதில் நெறிமுறை மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலம் குழந்தை பிறந்தது பிரிட்டனில் இதுவே முதல் முறையாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!