மத்தலவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய இராட்சத விமானம்

உலகின் மிகப்பெரிய- இராட்சத விமானம் சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக, விமான நிலைய முகாமையாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

Antonov An-225 Mriya வகையைச் சேர்ந்த இந்த இராட்சத சரக்கு விமானம், எரிபொருள் நிரப்புவதற்காகவும், விமான பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவுமே, மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து வந்துள்ள இந்த விமானம் எப்போது புறப்பட்டுச் செல்லும் என்று இன்னமும் திட்டமிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

1980களில் சோவியத் ஒன்றியத்தில் உக்ரேன் இருந்த போது, இந்த Antonov An-225 Mriya இராட்சத சரக்கு விமானம் வடிவமைக்கப்பட்டது.

ஆறு டர்போபான் இயந்திரங்களைக் கொண்ட இந்த விமானம், 640 தொன் எடையைச் சுமந்து செல்லக் கூடியது.

உலகில் தற்போது சேவையில் உள்ள விமானங்களில் மிகப் பெரிய இறக்கையைக் கொண்டதும் இந்த விமானம் தான்.

விமானத்தின் நீளம், 84 மீற்றர். அதன் இறக்கைகளின் நீளம் 88 மீற்றராகும்.

இந்த இராட்சத விமானம் கடந்த ஆண்டும், அவுஸ்ரேலியாவில் இருந்து மும்பை செல்லும் வழியில், மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!