வியன்னாவுக்கான தூதுவரை திருப்பி அழைத்தது ஏன்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

ஒஸ்ரியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைக்க உத்தரவிட்டமைக்கான காரணத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த ஒசோன் நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே, வியன்னாவில் இருந்து சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகர மற்றும் ஐந்து அதிகாரிகளை நாடு திரும்ப உத்தரவிட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார்.

”வியன்னாவில் இருந்த எமது தூதுவருடன் அதிகாரபூர்வ விடயம் சம்பந்தமாக பேச வேண்டியிருந்தது. எனது தொடர்பாடல் குழு, அவருடன் தொடர்பை ஏற்படுத்த நான்கரை மணி நேரம் முயன்றது.

தூதரகத்தில் இருந்த ஆறு தொலைபேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும், பதில் இல்லை.

இந்த தூதரகமே, வேறு நான்கு ஐந்து நாடுகளுக்குமான பொறுப்பையும் கவனிக்கிறது.

ஆறு தொலைபேசி இணைப்புகளுக்கும் வரும் தொலைபேசி அழைப்புகளில் ஒன்றுக்கும் கூட அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால், அங்கு பணியாளர்கள் இல்லை என்றே அர்த்தம்.

அங்கிருந்து ஏனைய நாடுகளிலுள்ள பிரதிநிதிகள் எந்த தகவலையும் பெற முடியாது. அந்த முடிவை எடுப்பதற்கு இது தான் காரணம்.

திருப்பி அழைக்கப்பட்டவர்கள், அடுத்த சில நாட்களில் நாடு திரும்புவார்கள்” என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!