மஹிந்தவின் எதிர்காலம் தெரிவுக்குழுவின் கையில்!

பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல எம்.பிகளின் அரசியல் எதிர்காலம் தெரிவுக்குழுவில் முடிவாகும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நீர்கொழும்பு ஐ.தே.க தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “ 225 எம்.பிகள் கையொப்பமிட்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க கோரினாலும் தான் அவரை நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார். வேறு நபரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.

இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவை அவர் பிரதமராக நியமித்தார். நாம் நியமித்த ஜனாதிபதியின் சிறகுகள் வெட்டப்பட்டுள்ளன. அவர் பறக்க நினைத்தாலும் அவரால் பறக்க முடியாது. நிறைவேற்று ஜனாதிபதி முறையிலுள்ள மோசமான தன்மை பற்றி அமைச்சரவை நியமிப்பது தொடர்பான இறுதி பேச்சுவார்த்தையின் போது நான் ஜனாதிபதிக்கு விளக்கினேன்.முன்பிருந்த ஜனாதிபதிகள் தமக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தனர். தற்போதைய ஜனாதிபதி தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தினார்.

தற்போதைய பாராளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எம்.பி பதவி இரத்தாகும் என்ற அச்சத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ இருக்கிறார்.பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மறுநாள் அவர் மொட்டு கட்சியில் அங்கத்துவம் பெற்றார். மஹிந்த ராஜபக்ஷ தமது கட்சி உறுப்பினர் என கட்சி செயலாளரினூடாக ஜனாதிபதி, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவர் மொட்டு கட்சியில் அங்கத்துவம் பெற்ற படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. தற்பொழுது கடிதம் வெளியிட்டு எந்த பயனும் கிடையாது.

சட்டத்தின் முன்னிலையில் இந்தப் பிரச்சினை தீரும். பொது ஜன பெரமுனயில் தான் அங்கத்துவம் அன்றி விண்ணப்பமே பெற்றதாக தற்பொழுது கூறுகின்றனர். 50 மொட்டு கட்சி எம்.பிகளின் நிலைமை மோசமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!