உக்ரைனை தொடர்ந்து மேலும் நான்கு நாடுகளுக்கு குறி வைக்கும் புடின்!

உக்ரைன் மீதான தாக்குதல் முறியடிக்கப்படாமல் போனால் மேலும் நான்கு நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியால் ஆபத்து என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய படையெடுப்புக்கு உக்ரைன் சரணடைந்தால் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இனி ராட்சத பலத்துடன் நடந்து கொள்வார் என உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
    
ரஷ்ய ஜனாதிபதியின் திட்டம் உக்ரைனில் வெற்றிபெற்றால், அடுத்து அவரை எந்த உலக சக்திகளாலும் கட்டுப்படுத்த முடியாது எனவும், அவரது அடுத்த குறி போலந்து, லாத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகிய நான்கு நாடுகள் மீது படையெடுப்பதே என உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Oleksii Goncharenko வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை உக்ரைனுக்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தற்போதைய சூழலில் இந்த உதவிகள் போதாது எனவும், நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை எனவும், உலக நாடுகளுக்கு இவ்வாறான நெருக்கடி இனி ஏற்படாமல் இருக்கவும் தான் போராடுகிறோம் என்றார் அவர்.

உக்ரைனை வென்றுவிட்டால் புடினை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும், அவர் மிகவும் ஆக்ரோஷமாக அடுத்த நகர்வுகளை முன்னெடுப்பார் எனவும் Oleksii Goncharenko எச்சரித்துள்ளார்.

இந்த 6 நாட்களில் புடினின் வெறியாட்டத்திற்கு இலக்கான பெண்கள், சிறார்கள் மற்றும் முதியவர்கள் எத்தனை பேர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளார்கள் என தெரியாது என குறிப்பிட்டுள்ள அவர், 1940ல் லண்டன் மக்கள் எதிர்கொண்ட நிலையை தற்போது உக்ரைன் மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்றார்.

இதனிடையே, உக்ரைன் நகரங்களில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, மக்களை உளவியல் ரீதியாக வதைக்கவும் ரஷ்யா திட்டமிட்டு வருவதாக பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!