பிரசன்ன ரணதுங்க குற்றவாளி! – மேல்நீதிமன்றம் தீர்ப்பு.

மேல் மாகாண முதலமைச்சராக இருந்த போது, காணி ஒன்று தொடர்பில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி உறுதி மொழிக் குறிப்பினை கையெழுத்திட்டுக் கொண்டமை தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் அத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
    
அத்துடன் குறித்த குற்றம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 25 மில்லியன் ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு ( முறைப்பாடளித்தவர்) ஒரு மில்லியன் ரூபா நட்ட ஈடு செலுத்தவும் உத்தரவிட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான தீர்ப்பை அறிவித்தார்.
மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்க இருந்த போது, மீத்தொட்டமுல்லை பகுதியில் சதுப்பு நிலப் பகுதியொன்றினை நிரப்புவதற்கு தேவையான அனுமதியை வழங்கவும், அந் நிலப்பகுதியில் இருந்து சட்ட விரோத குடியிருப்பாளர்களை வெளியேற்றவும், கிஹான் மெண்டிஸ் எனும் வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபாவை கோரி அச்சுறுத்தியமை, உறுதி மொழிக் குறிப்பொன்றினை கையெழுத்திட்டுக்கொண்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதிக்கும் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றம் இழைத்ததாக கூறி, சட்ட மா அதிபரால் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் பரீக் ஆகியோருக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந் நிலையில், மூன்றாவது பிரதிவாதியான நரேஷ் குமார் பரீக் என்பவர், வழக்கு விசாரணை ஆரம்பிக்க முன்னரேயே நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அவர் இல்லாமலேயே குறித்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் விசாரணை செய்தது.

சாட்சி விசாரணைகள் நிறைவுற்ற நிலையில், திங்கட்கிழமை குறித்த வழக்கின் தீர்ப்பு நீதிபதி மஞ்சுள திலகரத்னவால் அறிவிக்கப்பட்டது.

இதன்போது தீர்ப்பை அறிவிக்க ஆரம்பித்த நீதிபதி, முதலில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் 2 ஆம் பிரதிவாதியான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவி மொரின் ரணதுங்க, 3 ஆம் பிரதிவாதி நரேஷ் குமார் பாரிக் ஆகியோரை விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.

எனினும் தொடரப்பட்டிருந்த 15 குற்றச்சாட்டுக்களில், 13 ஆவது குற்றச்சாட்டான , அச்சுறுத்தி உறுதி மொழிக் குறிப்பொன்றினை கையெழுத்திடச் செய்து பெற்றுக்கொண்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக நீதிமன்றம் காண்பதாக நீதிபதி அறிவித்தார்.

குற்றவாளியான பிரசன்ன ரணதுங்க, தனக்கு சட்ட ரீதியாக சொந்தமற்ற ஒரு சொத்தை சட்ட விரோதமாக பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாக தீர்ப்பை அறிவித்து திறந்த மன்றில் நீதிபதி மஞ்சுள திலகரத்ன தெரிவித்தார்.

இந் நிலையில், குற்றவாளியாக காணப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்பில் தண்டனை வழங்கப்படும் போது, இலகு ரக தண்டனை ஒன்றினை வழங்குவது தொடர்பில் மன்றில் நியாயங்களை முன் வைக்க குற்றவாளி தரப்புக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

இந் நிலையில், குற்றவாளி பிரசன்ன ரணதுங்க சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மன்றில் விடயங்களை முன் வைத்தார். இதனையடுத்து தண்டனை எவ்வாறு அமைய வேண்டும் என வழக்கை நெறிப்படுத்திய அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் விடயங்களை முன் வைத்தார்.

இதனையடுத்து தண்டனை குறித்த தீர்ப்பை அறிவித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குற்றவாளியான பிரசன்ன ரணதுங்கவிற்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்தார். 25 மில்லியன் ரூபா அபராதத்தை விதித்த நீதிபதி, அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 09 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈட்டை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.

இந் நிலையில் அபராதம் மற்றும் நட்ட ஈடு செலுத்துவது தொடர்பில் வழக்கானது எதிர்வரும் 20 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!