இலங்கை உத்தரவாதம் வழங்கினால் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் – ரஸ்யா

இலங்கை அரசாங்கத்தினால் உத்தரவாதம் வழங்கப்படும் பட்சத்தில் தமது விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கைக்குப் பயணிக்கும் ரஷ்ய விமானங்கள் மீண்டும் தடுத்து வைக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கத்தினால் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என ஏரோஃப்ளொட் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அதிகாரிகளினால் வழங்கப்படும் உத்தரவாதத்துக்கு அமைய கொழும்பு மற்றும் மொஸ்கோவுக்கு இடையிலான விமானப் பயண நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க ரஷ்யா தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் குறித்த தடையினை கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!