ETF மற்றும் EPF என்பனவற்றை கொள்ளையிட முயற்சி: வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றை கொள்ளையிடுவதற்கு முயற்சிக்கப்படுவதாக அனைத்து தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த இரண்டு நிதியங்களிலும் காணப்படும் சுமார் ஆறாயிரம் கோடி ரூபா பணத்தை அரசாங்கம் இவ்வாறு கொள்ளையிட முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் இந்த பணம் கொள்ளையிடப்பட உள்ளதாக அவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள உள்நாட்டு கடன்களில் 20 முதல் 25 வீதம் வரையில் தள்ளுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக பணம் கொள்ளையிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு மக்களின் பணம் கொள்ளையிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இவ்வாறான நிதியங்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களை தள்ளுபடி செய்தால் ஓய்வு பெற்றுக் கொள்ளும் போது ஊழியர்கள் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு வங்கிகள் மற்றும் காப்புறுதி நிதியங்களினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைகளுக்கு தாக்கம் ஏற்பட்டால் வங்கிக் கட்டமைப்பே சீர்குலைய சந்தர்ப்பம் உருவாகிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தனியார் துறையினரையும் அணி திரட்டி போராட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.