சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கனவு:ஐக்கிய மக்கள் சக்தி

சர்வக்கட்சி அரசாங்கம் என்ற விடயம் ரணில் விக்ரமசிங்கவின் இருப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்பதுடன்அது அமைக்கப்படும் விதத்தை காண முடியவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பு காணப்படுகிறது. சர்வக்கட்சி அரசாங்கம் என்பது பொது மக்களின் கனவாக மாறும் இடத்திற்கு வந்துள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்தது.

எனினும் பழைய விடயங்களே நடந்து வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வழமைப்போல் மக்களுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருகின்றனர். பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளன.

மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளது. தலைவர்களுக்கு எதிராக பட்டம் விடும் நிகழ்ச்சி ஒன்று நடந்ததை நாம் பார்த்தோம். தற்போது பட்டத்தை பறக்கவிட முடியவில்லை.

இப்படி சென்றால், பத்திரிகைகளில் கார்ட்டூன்களை வரைய முடியாது. கார்ட்டூனை வரையும் பத்திரிகையாளர்களை சிறையில் அடைக்கலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

வர்த்தமானியில் பொருட்களின் விலைகளை குறைத்தாலும் சந்தையில் விலைகள் குறையவில்லை. தற்போது பெட்ரோல், டீசல் இல்லை. பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர உற்சாகமாக கூறினார்.

கியூ.ஆர். இருந்தாலும் எரிபொருள் இல்லை. காஞ்சனவின் டுவிட்டரிலும் ஊடகங்களிலும் இருக்கும் எரிபொருள் நாட்டில் இல்லை எனவும் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.