ஜனாதிபதியின் திட்டத்தைக் குழப்பிய மேற்குலக நாடுகள்!

?????????????????????????????????????????????????????????
ஐ.நா பொதுச்சபையில், போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினரைக் காப்பாற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில் கைவிட நேரிட்டதாகவும் அதற்கு மேற்குலக அழுத்தங்களே காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி விசேட பொறிமுறை ஒன்றினை முன்வைக்கப் போவதாக வெளிவந்த செய்திகளையடுத்து கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் உஷாரடைந்தன.இந்த பொறிமுறையில் – போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளான பெரும்பாலான படையினரும் சில அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு ஒன்றின் அடிப்படையில் விடுதலை செய்யப்படும் ஏது உள்ளதாக அறிந்த இராஜதந்திர வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்தன.

இந்த பொறிமுறையின் கீழ் சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டாலும் போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான படையினரை விடுவிப்பது என்பதை ஏற்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்படி செய்யப்பட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணைக்கு எதிரானதாக அது அமைந்து விடும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக பதில் தூதுவர் – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஆகியோர் பம்பரமாய் செயற்பட ஆரம்பித்தனர். ஜனாதிபதி மைத்திரியை நேரடியாக சந்தித்த அவர்கள் இது தொடர்பான தங்களது அதிருப்தியை தெரிவித்ததுடன் , ஜீ எஸ் பி பிளஸ் மற்றும் இதர விடயங்களில் இந்த விவகாரம் செலுத்தும் தாக்கம் குறித்தும் எடுத்துக் கூறினர் .

இதனையடுத்து அமெரிக்கா புறப்பட முன்னர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணிலுடன் நீண்ட மந்திராலோசனை நடத்திய ஜனாதிபதி , முன்னதாக இதனை அமைச்சரவையில் கூறியிருந்தாலும் அதனை மாற்ற வேண்டிய நிலைமை குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார்.

அப்போது கருத்து வெளியிட்ட ரணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் , அரசியல் கைதிகள் விடுதலை என்ற போர்வையில் போர்க்குற்றச்சாட்டு உள்ள படையினர் மீதான பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் நிறைவேறினால் கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக கோடி காட்டியிருக்கிறார். இதன் பின்னர் ஜனாதிபதியின் அந்த விசேடபொறிமுறைத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!