சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்தார். சிறுவர்கள் முறையற்ற வகையில் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் அடுத்த வருடம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் பல்வேறு வகையிலான சைபர் மீறல்களுக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் இது பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் பல கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது என்றும் சில நாடுகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இக்காலத்தில் எங்கள் பிள்ளைகளை வீட்டில் வைத்திருந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைப்பது போதுமானதல்ல. வீடுகளில் அவர்களது சொந்த அறைகளுக்குள் இருந்தாலும் அவர்களுக்கு திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம். எனவே பெற்றோர் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தமது கல்வித் தேவைகளுக்கு மாத்திரமே இணையத்தை அணுகவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது என்று அமைச்சர் கூறினார்.

உலக சிறுவர் தினத்தை கொண்டாடிய தேசிய நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் சந்ராணி பண்டார இவ்வாறு கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!