அமைச்சரவைக் கூட்டத்தில் காவல்துறை மீது சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“ஒரு குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும் போதும் மேலும் பல குற்றங்கள் நடக்கின்றன. அதனால் அவசியமான நடவடிக்கையை அவசரமாக எடுக்க வேண்டியுள்ளது.

காவல்துறையின் நடவடிக்கையினால் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காவல்துறை மா அதிபர் கோமாளித்தனமாகச் செயற்படுகிறார்.

உயர் காவல்துறை அதிகாரிகளின் செயற்பாடுகள், அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.” என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது, சிறிலங்கா பிரதமரோ, சட்டம், ஒழுங்கு அமைச்சரோ எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!