வாழையைக் கொத்திய மரங்கொத்தி போல மாட்டிக்கொள்ள வேண்டாம்! – சுமந்திரனை எச்சரிக்கிறார் மனோ

வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுப்பட வேண்டாம் என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.

“பகையாளியாக என்னைப் பார்க்காதீர்கள் வடக்கு, கிழக்கில் பல தமிழ்க் கட்சிகள் உள்ளன. எம்மை பகைமை உணர்வோடு பார்க்காதீர்கள். நட்புடன் பாருங்கள். பகைமை முரண்பாட்டு இருக்கக் கூடாது. நட்பு முரண்பாடு இருக்கலாம். பகைமை முரண்பாடு இருந்தால், அது எதிரிக்குத் தான் வாய்ப்பு.

பகைமை முரண்பாட்டுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை பார்க்காதீர்கள். வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் எனது இரத்தத்தின் இரத்தங்கள். அவர்களுக்குத் துன்பம், துயரம் வந்தால் எனக்கு வலிக்கின்றது. ஏனென்றால், நாம் அனைவரும் ஒரே உணர்வால், ஒரே இரத்தம் உடையவர்கள்.

அதனை என்னுடன் முரண்பாட்டைத் தோற்றுவிக்க விரும்புவோர் அறிய வேண்டும். கடந்த கால போர் வரலாறு, மனித உரிமை போராட்டம் உள்ளிட்டவை, சில புது முகங்களுக்குப் புரியவில்லை. அவ்வாறு புரியாதவர்கள், புரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து தமக்கு தான் எல்லாம் தெரியும் தாமே எல்லாம் அறிந்தவர்கள் எனும் பாணியில் செயற்பட வேண்டாம்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வீட்டுத் திட்டத்தை வழங்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கடந்த வாரம் கூறியுள்ளார். எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரக் கூடியவர் சஜித். அவருடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருக்கின்றது. அவரிடம் உள்ள வீட்டுத்திட்டம், மாதிரி கிராம வீட்டு திட்டமாகும். ஆனால், எனது அமைச்சிடம் உள்ளது நல்லிணக்க வீட்டுத்திட்டமாகும். இது மாதிரி கிராம வீட்டுத்திட்டம் போல் அல்ல. யுத்தத்தால் பாதிப்படைந்த மக்கள் வாழும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதாகும் .

கடந்த காலத்தில் வீட்டுத்திட்டம் தாமதமானமைக்கு நான் காரணமில்லை. எட்டாவது மாதத்தில்தான், எனக்கு வீட்டுத்திட்டம் வழங்க அனுமதி கிடைத்தது. தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகியுள்ளன. இந்நிலையில், என்னைத் திட்டுவது ஏற்புடையது அல்ல. என்னைத் திட்ட வேண்டும் என்றால் வேறு காரணங்கள் கூறி திட்டுங்கள். வீட்டுத்திட்டம் தாமதம் எனக் கூறித் திட்டாதீர்கள்.

எங்கள் அரசாங்கம் எனக்கு வீட்டுதிட்டம் வழங்க அனுமதித்துள்ளது. அதனை நல்லிணக்க அமைச்சுக்குக் கொடுக்க வேண்டாமென யாரும் தடுக்க முடியாது. யாருக்கு எதனைக் கொடுப்பது என்பதனை ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள். மற்றவர்கள் அது பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடந்த மூன்று வருடங்களாக வீட்டுத்திட்டம் தாமதமாகும் போது அரசாங்கத்தில் இருந்தவர்களும் எதிர்க்கட்சியில் இருந்தவர்களும் அப்போது தூங்கிக் கொண்டு இருந்தார்கள். தற்போது எனக்கு வீட்டுத்திட்டம் வழங்க அரசாங்கம் அனுமதித்தவுடன் தான் பலர் கண் விழித்துள்ளனர்.

வட மாகாண முதலமைச்சர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருடன் மோதுவது போல என்னுடன் மோத வேண்டாம். மரங்கொத்தி பல மரங்களைக் கொத்திய பிறகு வாழை மரத்தை கொத்தி மாட்டுப்பட்டது போல என்னுடன் மோதி மாட்டுப்பட வேண்டாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

தங்களுடைய கட்சி வடக்கு, கிழக்கில் தேர்தலில் போட்டியிடுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அவ்வாறான எந்த முடிவையும் நாம் எடுக்கவில்லை. பெரும்பாலும் அனைவரும் அதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அது தொடர்பில் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!