இரசாயன ஆயுதங்கள் பிரகடன சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிடம்

இரசாயன ஆயுதங்கள் பிரகடனச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான திருத்தச்சட்ட மூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டமூலத்துக்கு அமைய, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சே, இரசாயன ஆயுதங்கள் பிரகடனச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருக்கும்.

முன்னதாக, கைத்தொழில் அமைச்சே இதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது.

இரசாயன ஆயுதங்களை அபிவிருத்தி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்தலை தடுப்பதற்கான, அனைத்துலக பிரகடனத்துக்கு இணங்க, இரசாயன ஆயுதங்கள் பிரகடனச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களின் படி, தேசிய இரசாயன ஆயுதங்கள் அதிகார சபை மற்றும் அதற்கான பணிப்பாளரை நியமிக்கும் அதிகாரம், பாதுகாப்பு அமைச்சுக்கு அளிக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!