நிர்மலா தேவி விவகாரம் : ஆளுநர் மாளிக்கை விளக்கம்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க பொய்யான தகவல். ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்தில்லை. மதுரை பல்கலை கழக விருந்தினர் மாளிகையில் ஆளுநர் தங்கியது கிடையாது.

நக்கீரன் இதழ் கட்டுரை விவகாரத்தில், மாநிலத்தின் முதல் குடிமகனை தரம் தாழ்ந்து விமர்சித்ததால் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையின் மாண்பைக் குறைக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது. பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை இணைத்து பேசுவதற்கு ஆளுநர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உண்மை என்னவென்று விசாரிக்காமல் நக்கீரன் இதழ் ஆளுநர் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. பொலிஸார் விசாரணை மூலம் உண்மை வெளிவரும். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் மாளிகை பொறுமை காத்து வந்தது.

நக்கீரன் விவகாரத்தில் பத்திரிகை விதிகள் மீறப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் ஆரோக்கியமான முறையில் கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் ஆளுநர் மீதான நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாது. ஆளுநர் மாளிகை தனது மாண்பைக் குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் செயல்களைக் கண்டு அஞ்சாது.’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!